பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

    தமிழ் நம் தாய்மொழி. ஒரு மொழியை பற்றி சொல்லும் போதே அதன் கம்பீரமும் வரலாறும் நம்மை மட்டும் அல்ல எத்தனை எத்தனையோ அயல் நாட்டு மனிதர்களை கூட தமிழ் மீது பித்து பிடிக்க வைத்துள்ளது. நம் மொழி  திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும்,முக்கியமாக  செம்மொழியும் ஆகும். 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது இந்தியாவில் வழக்கில் இருக்கும் ஒரே செம்மொழியாகும்
     பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது. இத்தனை வருட தொன்மை வாய்ந்த மொழியும் அதன் கட்டமைப்பும் , அதன் வழியாக ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழியை தான் நாம் சிறு வயதிலேயே  கற்றிருக்கிறோம்  என்று நினைக்கும் போதே , பெருமை விண்ணை முட்டுகிறது.
     வெளி ஆக்கிரமிப்புக்களாலும் காலனித்துவ ஆதிக்கத்தாலும் தமிழ் தேங்கி கிடந்த நிலையில் இருந்து மீண்டு தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்த தொடங்கிய காலப்பகுதி தமிழ் மறுமலர்ச்சி காலம் ஆகும். “கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது.”
    இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதியதிராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்’ (The Comparative Grammar of the Dravidian Languages) ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.
    18 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் . வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
     தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
    • சங்க காலம் (கிமு 300 – கிபி 300)
    • சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)
    • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)
    • மத்திய காலம் (கிபி 1200 – கிபி 1800)
    • இக்காலம் (கிபி 1800 – இன்று வரை)
    பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன
    தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்
    உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்றவர்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதியதமிழ் மொழியின் வரலாறுஎனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.
     கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாஎன்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கதுதமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.
    பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் கூறியுள்ளனர்.
    இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.
     சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.
     உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.
     மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.
     எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் இதன் மூலம்    புலனாகும்.
    இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.
    வரலாறு
    1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் . . சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.

    முதல் மாநாடு

    தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனதுதமிழ் கல்ச்சர்எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது.

    இரண்டாம் மாநாடு

    1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலேபூம்புகார்பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.
      
    மூன்றாவது மாநாடு
    பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.
    இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன

     நான்காவது மாநாடு

    1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

    5வது முதல் 8வது மாநாடு வரை
    முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது.
    ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் இடம்பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் இடம்பெற்றன.

    ஒன்பதாவது மாநாடு

    எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு  இன்று (23  ஜூன்) தொடங்கியுள்ளது.
    –0O0–
    தமிழ்நாட்டை பெரும்பான்மையாக ஆண்டவர்கள் சோழர்கள். தமிழை பற்றி குறிப்பிடும் பொது சோழர்கள் பற்றியும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.
    காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணி வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அதனைத் திருவிழாவாகக் கொண்டினார்கள்.
    கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்ச் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.


    அரசன் பெயர்
    ஆட்சியாண்டுகள்  
    யாருடைய மகன்
    தலைநகரம்
    விசயாலய சோழன்
    848-871
    அறியவில்லை
    தஞ்சாவூர்
    ஆதித்த சோழன்
    871-907
    விசயாலய சோழன்
    தஞ்சாவூர்
    முதலாம் பராந்தக சோழன்
    907-955
    ஆதித்த சோழன்
    தஞ்சாவூர்
    கண்டராதித்த சோழன்
    950-957
    முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன்
    தஞ்சாவூர்
    அரிஞ்சய சோழன்
    956-957
    முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன்
    தஞ்சாவூர்
    இரண்டாம் பராந்தக சோழன்
    957-970
    அரிஞ்சய சோழன்
    தஞ்சாவூர்
    ஆதித்த கரிகாலன்
    957-969
    சுந்தர சோழன்
    காஞ்சிபுரம்
    உத்தம சோழன்
    973-985
    கண்டராதித்த சோழன்
    தஞ்சாவூர்
    முதலாம் இராஜராஜ சோழன்
    985-1014
    சுந்தர சோழன்
    தஞ்சாவூர்
    முதலாம் ராஜேந்திர சோழன்
    1012-1044
    முதலாம் ராஜராஜ சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    முதலாம் ராஜாதிராஜ சோழன்
    1018-1054
    முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    இரண்டாம் ராஜேந்திர சோழன்
    1051-1063
    முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    வீரராஜேந்திர சோழன்
    1063-1070
    இரண்டாம் ராஜேந்திர சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    அதிராஜேந்திர சோழன்
    1067-1070
    வீரராஜேந்திர சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    முதலாம் குலோத்துங்க சோழன்
    1070-1120
    முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பெயரன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    விக்கிரம சோழன்
    1118-1135
    முதலாம் குலோத்துங்க சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    இரண்டாம் குலோத்துங்க சோழன்
    1133-1150
    விக்கிரம சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    இரண்டாம் ராஜராஜ சோழன்
    1146-1163
    இரண்டாம் குலோத்துங்க சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    இரண்டாம் இராஜாதிராஜ சோழன்
    1163-1178
    இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    மூன்றாம் குலோத்துங்க சோழன்
    1178-1218
    இரண்டாம் ராஜராஜ சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    மூன்றாம் இராஜராஜ சோழன்
    1216-1256
    மூன்றாம் குலோத்துங்க சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்
    மூன்றாம் இராஜேந்திர சோழன்
    1246-1279
    மூன்றாம் இராஜராஜ சோழன்
    கங்கைகொண்ட சோழபுரம்



    தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 – 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
    இதுவரை கூறிய வருடங்களையும் வரலாறுகளையும் பாருங்கள்  வேறு எந்த மொழிக்கும் இவ்வளவு பழைய தொன்மையான பாரம்பரியமும் பெருமைமிகு வரலாறும் கிடையாது. இவ்வளவு தொன்மையும் மரபுகளையும் உடைய தமிழ் மொழி நம் தாய் மொழி என்பது நம் அனைவருக்கும் பெருமை தரக்கூடிய நிகழ்வு ஆகும்.
    நன்றி : தமிழ் விக்கி , உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு-கோவை(வலைக்குழுமம்

    Leave a Reply

    Blogger templates

    Blogger news

    Blogroll